See this Recipe in English
அக்காரவடிசல் பொதுவாக ஆடிப்பூரம் அன்று செய்யப்படும். இது தவிர மார்கழி மாதங்களிலும் செய்து ஆண்டாளுக்கு படைக்கலாம். ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அக்காரஅடிசில் சக்கரை பொங்கல் போன்று அரிசி, பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டாலும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை முற்றிலுமாக பாலிலேயே வேகவைத்து செய்யப்படுகிறது. சர்க்கரை பொங்கலை காட்டிலும் வெல்லம் மற்றும் நெய் கூடுதலாக சேர்க்க வேண்டும். சுவையான அக்கார அடிசிலை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான அக்காரவடிசல் செய்ய சில குறிப்புகள்
- அக்கார அடிசல் செய்வதற்கு பச்சரிசி பயன்படுத்தலாம், அல்லது பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி பயன்படுத்தலாம்.
- அரிசி, பருப்பு நன்றாக குழைவாக வேக வைக்க வேண்டும்.
- பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் பொங்கி வழியும் வாய்ப்புள்ளது எனவே பாத்திரத்திலேயே வேக வைக்கலாம்.
- பால் சேர்த்ததும் குறைவான தீயில் வைத்து வேக வைக்கவும்.
- தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
- அக்கார அடிசில் செய்வதற்கு 2 – 3 கப் வெல்லம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கும் பொழுது அதனுடன் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப் – 200g
- பாசிப்பருப்பு – ½ கப் – 100g
- பால் – 1 ½ லிட்டர்
- வெல்லம் – 2 ½ கப் – 600g
- நெய் – ½ கப் – 120ml
- முந்திரி பருப்பு – 10 – 15
- காய்ந்த திராட்சை – 15 – 20
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
செய்முறை
1. ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி சேர்த்துக்கொள்ளவும்.
2. அதனுடன் ½ கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
3. இதனை லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
4. வறுத்த பின்னர் ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.
5. அதனுடன் 1 ½ லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.
6. குறைவான தீயில் வைத்து அரிசி பருப்பு மசிந்து வரும் வரை வேக வைக்கவும்.
7. வெல்ல பாகு காய்ச்சுவதற்கு ஒரு பாத்திரத்தில் 2 ½ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
9. வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
10. அரிசி பருப்பு குழைந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
11. கலந்த பின்னர் 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
12. ஒரு பானில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
13. நெய் சூடானதும் முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுக்கவும்.
14. அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து, உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
15. வறுத்த முந்திரி திராட்சை அக்காரவடிசல் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
16. அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து கலக்கவும்.
17. பின்னர் 3 ஏலக்காய் & 3 கிராம் லேசாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
18. தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையான அக்காரவடிசல் தயார்.