See this Recipe in English
இட்லி மாவு போண்டா மொறுமொறுப்பான மற்றும் சுவையான போண்டா வகை. இது வெறும் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். போண்டா பலவிதமாக செய்யப்படுகிறது. மைசூர் போண்டா மைதா மாவு வைத்து செய்யப்படும், உருளைக்கிழங்கு போண்டா உருளைக்கிழங்கு மசாலா, கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து பொறிக்கப்படும், உளுந்து மாவில் போண்டா செய்யலாம். இட்லி மாவு போண்டா விற்கு தனியாக மாவு ஊற வைத்து அரைக்கதேவையில்லை, வீட்டில் இருக்கும் அதிகம் புளிக்காத இட்லி மாவு பயன்படுத்திக்கொள்ளலாம். இட்லி மாவு போண்டா சட்னி, சாம்பார், தக்காளி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.
சுவையான இட்லி மாவு போண்டா செய்ய சில குறிப்புகள்
- போண்டா செய்ய மாவு எடுக்கும்பொழுது மேல் மாவு பயன்படுத்த வேண்டும், அடி மாவு பயன்படுத்தினால் போண்டா சுவையாக இருக்காது.
- அதேபோல மாவு அரைத்தவுடன் புளிக்க வைப்பதற்கு முன்பு போண்டா செய்யலாம்.
- மாவு அரைத்து புளிக்க வைத்து 1, 2 நாட்களுக்குள் போண்டா செய்யலாம்.
- இட்லி மாவு நன்றாக புளித்த பிறகு போண்டா செய்ய முடியாது, போண்டாவும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.
- போண்டா மாவு கரைக்கும் பொழுது மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் 2 அல்லது 3 கரண்டி இட்லி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- மாவு நீர்த்து போய் இருந்தால் 2 அல்லது 3 தேக்கரண்டி மைதா மாவு பயன்படுத்தி கொள்ளவும்.
- ஏற்கனவே இட்லி மாவில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.
- பேக்கிங் சோடா விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது பேக்கிங் சோடா சேர்க்காமலும் செய்யலாம்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உடன் சிறிதளவு நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளலாம்.
இதர வகைகள் – சேமியா போண்டா, மைசூர் போண்டா, மெது பக்கோடா, தயிர் வடை, உடனடி மெதுவடை, மொரு மொரு வடை, சாம்பார் வடை, மெதுவடை, வாழைப்பூ வடை, போண்டா சூப்
See this Recipe in English
இட்லி மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்
- 2 கப் இட்லி மாவு
- 1 பெரிய வெங்காயம்
- 1/4 மூடி தேங்காய் நறுக்கியது அல்லது துருவியது
- 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- உப்பு சிறிதளவு
- 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- 3 தேக்கரண்டி ரவை
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவு எடுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.
3. இதனுடன் கால் மூடி தேங்காயை பொடியாக நறுக்கி அல்லது துருவி சேர்த்துக் கொள்ளவும்.
4. 2 பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும், சிறிதளவு உப்பு, மற்றும் கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.
5. 2 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 3 தேக்கரண்டி ரவா சேர்த்துக் கொள்ளவும்.
6. இப்பொழுது கைகளால் மெதுவாக பிசைந்து கொள்ளவும். கில்லி போடும் பதத்திற்கு இருக்க வேண்டும்.
7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளவும்.
8. இப்பொழுது சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போடவும்.
9. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் பொரிக்கவும்.
10. பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
11. சுவையான இட்லி மாவு போண்டா தயார்.