Masala Bread Toast in Tamil | மசாலா பிரட் டோஸ்ட் | Bread Toast recipe | Masala Bread

See this Recipe in English

மசாலா பிரட் டோஸ்ட் வழக்கமான  டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி உண்பார்கள். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் மசாலா பிரட் டோஸ்ட் செய்யலாம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இதனை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான மசாலா பிரெட் செய்ய சில குறிப்புகள்

  • முட்டைகளை நன்றாக நுரை வரும் வரை அடித்து விட்டு அதன் பின்னர் மசாலா பொருட்களை சேர்க்கவும்.
  • பிரெட்டை முட்டையில் ஓரிரு நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின்னர் செய்தால் சுவையாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாய் மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்க்காமல் செய்யலாம்.
  • பிரெட்டில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பார்கள் எனவே முட்டைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • மிளகுத்தூளை பிரஷ்ஷாக இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
  • டோஸ்ட் செய்வதற்கு வெண்ணெய் சேர்ப்பதற்கு பதிலாக  சமையல் எண்ணை அல்லது நெய் சேர்த்தும்  டோஸ்ட் செய்யலாம்.
  • மிதமான தீயில் வைத்து பிரெட்டை டோஸ்ட் செய்யவும், தீ அதிகமாக இருந்தால் மேலே கரிந்துவிடும் உள்ளே வேகாமல் இருக்கும்.

இதர வகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • ப்ரெட் துண்டுகள் – 5
  • முட்டை – 3 
  • பெரிய வெங்காயம் – ½
  • கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • சில்லி ப்ளேக்ஸ் – ½  தேக்கரண்டி
  • மிளகு தூள் – ¾  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • வெண்ணை – 2 – 3  தேக்கரண்டி 

செய்முறை

1. ஒரு பவுலில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.

2. அதனை ஒரு  விஸ்க் வைத்து நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.

3. பின்னர்  ½  பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

4. பிரஷ்ஷான கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. 2  பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் ½  தேக்கரண்டி  சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவும்.

7. இடித்த மிளகுத் தூள் ¾  தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.

8. முட்டைக்கு தேவையான அளவு உப்பு மற்றும் ¼ தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

9. முட்டையுடன் மசாலாவை நன்கு கலக்கவும்.

 10. ஒரு தோசை கல்லில் ½  தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

11.  பிரெட்டை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டையில் முக்கி எடுத்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால் 1 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ளலாம். 

12. வெண்ணெய் உருகிய பின்னர் பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

13. ஒவ்வொரு பக்கமும் 1 – 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்,  அவ்வபோது திருப்பி போடவும்.

14. நன்றாக வெந்த பின்னர் பரிமாறவும்.

15. சுவையான மசாலா பிரட் ரோஸ்ட் தயார்.

Leave a Reply