See this Recipe in English
வேர்க்கடலை சட்னி இட்லி, தோசை, பணியாரம், ஊத்தப்பம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவில் செய்யலாம். வேர்கடலை சட்னி பலவிதமாக செய்யப்படுகிறது. வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம், அல்லது வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து செய்யலாம். இந்த பதிவில் வேர்க்கடலையுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து செய்துள்ளேன். சுவையான வேர்க்கடலை சட்னி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான வேர்க்கடலை சட்னி செய்ய சில குறிப்புகள்
- வேர்க்கடலை வறுக்கும் போது மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்த வேர்க்கடலை பயன்படுத்தினால், அதை மீண்டும் வறுக்க தேவை இல்லை நேரடியாக சேர்த்துக் கொள்ளலாம்.
- காய்ந்த மிளகாய் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- தக்காளி சேர்த்திருப்பதால், புளி தனியாக சேர்க்கவில்லை, நீங்கள் விருப்பப்பட்டால் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதர வகைகள் – பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை – ½ கப் – 75g
- சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1 ( சிறியது)
- பூண்டு – 5 பற்கள்
- காய்ந்த மிளகாய் – 6
- சீரகம் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- உடைத்த உளுந்து – ½ தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 1
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
1. ஒரு வாணலியில் 1/2 கப் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.
2. லேசாக நிறம் மாறி வேர்கடலை மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. வேர்க்கடலை வறுத்த பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து தோல் நீக்கவும்.
4. வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
5. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் 1 சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
6. தக்காளி மென்மையாக வதங்கியதும் 6 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
7. 5 பல் பூண்டு, மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
8. இதை 2 – 3 நிமிடங்களுக்கு வதக்கிய பின்னர் ஆறவைக்கவும்.
9. ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொள்ளவும். அதனுடன் ஆற வைத்த வெங்காயம் தக்காளி கலவையை சேர்க்கவும்.
10. அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
11. தாளிப்பதற்கு ஒரு சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
12. அதனுடன் 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும்.
13. கடுகு பொரிந்து, உளுத்தம்பருப்பு லேசான பொன்னிறமான பின்னர், சட்னியுடன் சேர்த்து கலக்கவும். சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.