சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய மிக்க உணவு வகை, உலகப் புகழ் பெற்ற தமிழர் பண்டிகை தைப்பொங்கல் அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வீட்டில் சுவையான சக்கரைப் பொங்கல் செய்யப்படுகிறது. அது தவிர சக்கரை பொங்கல் கடவுளுக்கு நெய்வேத்தியமாக செய்யப்படும் மற்றும் விருந்து, விழாக்கள் போன்ற நாட்களிலும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை ஒன்றாம் தேதியும் செய்யப்படுகிறது.
தைப்பொங்கல் நன்றி தெரிவிக்கும் நாள், அப்பொழுது புதிதாக அறுவடை செய்த அரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, போன்றவற்றை கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு நன்றி செலுத்தப்படுகிறது. மேலும் உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் எனும் சொல் பொங்கி வருதல் எனப் பொருள்படும்.
சுவையான பொங்கல் செய்ய சில குறிப்புகள்
- சர்க்கரை பொங்கல் மண்பானை, பித்தளை அல்லது சில்வர் பானையில் செய்யலாம், மேலும் பிரஷர் குக்கரில் செய்யலாம். எதில் செய்தாலும் சக்கரை பொங்கல் சுவை மாறாது.
- சக்கரை பொங்கல் செய்ய, புது பச்சரிசி அல்லது பொங்கல் பச்சரிசி என கடைகளில் கிடைக்கும், அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம், அல்லது பொன்னி பச்சரிசி பயன்படுத்தலாம்.
- பொங்கல் செய்ய தரமான பழுப்பு நிற வெல்லத்தை பயன்படுத்தவும்.
- பச்சை கற்பூரம் சேர்ப்பது பொங்கலின் சுவையைக் கூட்டும்.
- சிறிதளவு ஜாதிக்காய் பொடி சேர்த்து பொங்கல் செய்தால் சுவையும் மணமும் கூடும்.
- இறுதியாக முந்திரி திராட்சையை வறுத்து சேர்த்த பிறகு கால் கப் அளவு கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
- சக்கரை பொங்கல் செய்யும் பொழுது வெல்லம் உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
- சக்கரை பொங்கல் பரிமாறும் பொழுது அதன் மேலே 1 தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறினால் அலாதியான சுவையாக இருக்கும்.
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
சக்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி – 200g
- 1/2 கப் பாசிப்பருப்பு – 75g
- 1.5 கப் வெல்லம்
- 1 கப் பால் – 250ml
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
- 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
- 1 சிட்டிகை உப்பு
- 1/2 கப் நெய்
- 1/4 கப் முந்திரி பருப்பு
- 20 உலர்ந்த திராட்சை
சக்கரை பொங்கல் செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சரிசி சேர்த்து அலசி விட்டு, 10 நிமிடம் நேரம் ஊறவைக்கவும்.
2. ஒரு பானில் 1/2 கப் பாசிப்பருப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
3. வறுத்த பின்னர் ஒரு முறை தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும்.
4. ஒரு பிரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் மற்றும் 1 கப் பால் சேர்த்து சூடாக்கவும்.
5. லேசாக பொங்கி வரும் பொழுது பாசிப்பருப்பு மற்றும் ஊற வைத்துள்ள பச்சரிசியை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக்கொள்ளவும்.
6. நன்கு கலந்த பின்னர் குக்கரை மூடி 6 விசில் வைக்கவும்.
7. ஒரு பாத்திரத்தில் 1.5 கப் வெல்லம் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும் சேர்த்து கலக்கவும்.
8. வெல்லம் நன்கு கரைந்த பின்னர் வெல்லத்தை சில நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
9. பிரஷர் அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கரண்டி கொண்டு மசித்து விடவும்.
10. வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
11. அதனுடன் 1 சிட்டிகை உப்பு, 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
12. ஒரு சிறிய கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும், 1/4 cup முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
13. அதனுடன் 20 உலர்ந்த திராட்சை சேர்த்து உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
14. வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சர்க்கரைப் பொங்கலில் சேர்த்து கலக்கவும்.
15. அதனுடன் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
16. கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கிளறவும்
17. சுவையான சக்கரைப்பொங்கல் தயார்.