See this Recipe in English
வத்த குழம்பு சுவையான குழம்பு வகை. வத்தல் குழம்பில் பல வகைகள் உண்டு, சுண்டைக்காய் வத்தல், பாவக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தல், மாங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் போன்றவற்றை பயன்படுத்தி வத்த குழம்பு செய்யலாம். வத்தல் என்பது என்பது விருப்பமான காய்கறியை உப்புக் கலந்த மோரில் ஊறவைத்து 4 – 5 நாட்களுக்கு வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும். அதனை சுத்தமான டப்பாவில் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சேமித்து வைக்கலாம். காய்கறிகளை இதுபோன்று வத்தல் செய்து குழம்பில் சேர்க்கும் பொழுது அதன் சுவை வித்தியாசமாகவும் அபாரமாகவும் இருக்கும்.
சுவையான வத்த குழம்பு செய்ய சில குறிப்புகள்
- வத்த குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும், மற்ற எந்த எண்ணெய் காட்டிலும் நல்லெண்ணெய் சேர்க்கும் பொழுது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
- வத்த குழம்பு செய்வதற்கு சுண்டைக்காய் வத்தல் பயன்படுத்தியுள்ளேன், நீங்கள் எல்லா வகையான காய்கறி வத்தல் வைத்து இதே முறையில் வத்த குழம்பு செய்யலாம்.
- பூண்டு மற்றும் வெங்காயம் அதிக அளவில் சேர்த்தால் வத்தக்குழம்பு சுவையாக இருக்கும்.
- புளி இனிப்பாக இருந்தால் ஒரு சிறிய எலுமிச்சை பழ அளவை காட்டிலும் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும், புளி புளிப்பாக இருந்தால் குறைவாக சேர்த்துக் கொள்ளவும்.
- வத்த குழம்பு புளிப்பு சுவை கூடுதலாக இருந்தால் அதற்கேற்றாற்போல் வெல்லம் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.
- வத்த குழம்பு, அப்பளம் மற்றும் எல்லா வகையான காய்கறி கூட்டு மற்றும் பொரியல் உடன் மிகவும் சுவையாக இருக்கும்.
- பிரிட்ஜ் பயன்படுத்தாமல் வெளியில் வைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும், ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
பருப்பு உருண்டை குழம்பு, காராமணி குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, மோர் குழம்பு,முருங்கைக் கீரை கூட்டு, வாழைக்காய் பொரியல், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல், உருளைக்கிழங்கு வருவல், சேப்பங்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், வாழைப்பூ வடை.
See this Recipe in English
வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
- சுண்டைக்காய் வத்தல் – ¼ கப்
- நல்லெண்ணெய் – 50ml
- வெந்தயம் – ¼ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- வெள்ளைப் பூண்டு – 50g
- சின்ன வெங்காயம் – 100g
- தக்காளி – 2
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
- புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
- வெல்லம் – சிறிதளவு
செய்முறை
1. சுண்டக்காய் வத்தலை சூடான தண்ணீரில் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2. ஒரு கடாயில் 50ml நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ¼ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி சீரகம், மற்றும் ½ தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
3. கடுகு, சீரகம் பொரிந்த பின்னர் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
4. பின்னர் 50g கிராம் வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும்.
5. பூண்டு ஓரளவு வதங்கிய பின்னர் 100g சின்னவெங்காயம் சேர்த்து மென்மையாக வதக்கிக் கொள்ளவும்.
6. வெங்காயம் வதங்கியதும் 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
7. தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மல்லி தூள், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் மற்றும் ½ தேக்கரண்டி சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
8. ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
9. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
10. பின்னர் ஊற வைத்துள்ள சுண்டைக் காய்களை தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
11. மீண்டும் மூடி வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும் அவ்வப்போது கிளறி விடவும்.
12. குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானதும் சிறிதளவு வெல்லம் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடங்களுக்கு வைக்கவும்.
13. சுவையான வத்தக் குழம்பு தயார்.