See this Recipe in English
கோதுமை ரவை பாயசம் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாயசம். இதனை ஆடி வெள்ளி கிழமையில் அம்மனுக்கு படைப்பதற்காக செய்துள்ளேன். ஆடிமாதம் தவிர மற்ற எல்லா விசேஷங்களுக்கும் இந்த பாயசம் செய்து இறைவனுக்கு படைக்கலாம். கோதுமையில் இருவிதமான ரவைகள் கிடைக்கின்றன ஒன்று சற்றுப் பெரியதாக உடைத்த கோதுமை அல்லது broken wheat என்று சொல்லப்படுகிறது மற்றொன்று சிறிதாக நாம் வழக்கமாக பயன்படுத்தும் ரவையை போன்று இருக்கும். இந்த பதிவில் நைஸ் கோதுமையை வைத்து பாயசம் செய்துள்ளேன். சுவையான கோதுமை ரவை பாயசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான கோதுமை ரவை பாயசம் செய்ய சில குறிப்புகள்
- கோதுமை ரவை பெரியதாக மற்றும் நைஸ் ரவையாக கிடைக்கும். இந்த பாயசம் செய்வதற்கு நைஸ் ரவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கோதுமை ரவையை வேக வைப்பதற்கு பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம் அல்லது பாத்திரத்தை பயன்படுத்தியும் வேக வைக்கலாம்.
- பாயசத்தை சுவை ஆக்குவதற்காக கண்டன்ஸ்டு மில்க்/மில்க்மெய்ட் பயன்படுத்தியுள்ளேன், அதற்கு பதிலாக 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
- கண்டன்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை இவை இரண்டையும் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் வெல்ல பாகு காய்ச்சும் பொழுது 2 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக பசும்பால் சேர்த்தும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.
- தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு பாயசம் அதிக நேரம் கொதிக்க கூடாது 2 – 3 நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும்.
இதர பாயசம் வகைகள்
அவல் பாயசம்
கடலை பருப்பு பாயசம்
சிறுதானிய பாயசம்
கேரமல் பாயாசம்
பாதாம் பாயசம்
சிவப்பு அவல் பாயசம்
தேவையான பொருட்கள்
- கோதுமை ரவை – 1 கப்
- துருவிய தேங்காய் – 2 கப்
- வெல்லம் – 1 கப்
- கண்டென்ஸ்ட் மில்க் – 1 கப்
- நெய் – 2 மேஜை கரண்டி
- கிராம்பு – 4
- முந்திரி பருப்பு – 10
- உலர்ந்த திராட்சை – 10
- ஏலக்காய் பொடி – ½ தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் அல்லது பிரஷர் குக்கரில் 1 கப் கோதுமை ரவை சேர்த்து கொள்ளவும்.
2. மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
3. அதனை ஒரு முறை கழுவிய பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
4. குக்கரை மூடி வைத்து குறைவான தீயில் 3 விசில் வைத்து வேக வைக்கவும் அல்லது ரவை மென்மையாக ஆகும் வரை வேக வைக்கவும்.
5. ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனை ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
7. பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
8. நைசாக அரைத்து வடிகட்டியில் ஊற்றி கெட்டியான தேங்காய் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
9. பின்னர் பிழிந்த சக்கை தேங்காயை மீண்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
10. நைசாக அரைத்து மீண்டும் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும், இம்முறை எடுக்கும் பால் இரண்டாவது தேங்காய் பால். முதல் பால் போல் கெட்டியாக இல்லாமல் ஓரளவு நீர்த்து இருக்கும்.
11. ஒரு பானில் 1 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.
12. அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
13. வெல்லம் கரைந்து நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
14. கோதுமை ரவை மென்மையாக வெந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
15. அதனை 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
16. பின்னர் 1 கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
17. இப்பொழுது இரண்டாவது முறை எடுத்த தேங்காய்ப் பாலை சேர்த்து குறைவான தீயில் 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
18. பின்னர் கெட்டியான முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
19. ஒரு சிறிய பேனில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் 4 கிராம்பு, மற்றும் பத்து முந்திரிப் பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.
20. முந்திரிப்பருப்பு ஓரளவு வறுபட்ட பின்னர் உலர்ந்த திராட்சைகளை சேர்த்து திராட்சைகள் உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
21. பின்னர் தயாராக உள்ள பாயசத்தில் சேர்க்கவும். ½ தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
22. சுவையான கோதுமை ரவை பாயசம் தயார்.