Chilli Masala Idli in Tamil | சில்லி மசாலா இட்லி | Chilli Idli | Masala Idli | Chilli idli recipe

See this Recipe in English

சில்லி மசாலா இட்லி இட்லியை எப்பொழுதும் சட்னி, சாம்பார், அல்லது பொடியுடன் சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோல சில்லி  மசாலா செய்து சாப்பிடும்பொழுது சுவை வித்தியாசமாகவும் இருக்கும் அதே சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி உண்பார்கள்.  சில்லி மசாலா இட்லி  மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு உணவாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.  குறிப்பாக மீதமான இட்லியில்  உப்புமா செய்யாமல் இதுபோல செய்யும்பொழுது உடனே காலியாகிவிடும்.

சுவையான சில்லி மசாலா இட்லி செய்ய சில குறிப்புகள்

  • மசாலா இட்லி செய்வதற்கு குட்டி இட்லி பயன்படுத்தலாம் அல்லது இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மீதமான இட்லி பயன்படுத்தலாம் அல்லது சூடான இட்லி ஆறியபின் பயன்படுத்தலாம்.
  • வெங்காயம் சேர்க்கும் போது முடிந்தவரை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் அப்போதுதான் மசாலா இட்லி உடன் சேர்ந்து வரும்.
  • சில்லி மசாலா இட்லியுடன் தயிர் பச்சடி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
  • குட்டி இட்லிக்கு பதிலாக சாதாரண இட்லி பயன்படுத்துவதாக இருந்தால் 5 இட்லி பயன்படுத்திக் கொள்ளவும்.
  • காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்க்கும் பொழுது காரம் இருக்காது நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது, விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.

இதர வகைகள் – பாசிப்பருப்பு இட்லி, ரவா இட்லி , சில்லி இட்லி, பொடி இட்லி, ஓட்ஸ் இட்லி, இட்லி மிளகாய் பொடி, இட்லி மாவு போண்டா, தக்காளி குருமா, மசாலா இட்லி

இதர சட்னிவகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்

 

சில்லி மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்

  • குட்டி  இட்லி – 20
  • சமையல் எண்ணெய் – ½  கப் – 120ml
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி –  சிறிது
  • மிளகாய்த்தூள் – 1.5 தேக்கரண்டி
  • கரம் மசாலா – ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • சிகப்பு மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
  • உப்பு –   தேவையான  அளவு 
  • டொமேட்டோ கெட்சப் – 1 தேக்கரண்டி
  • சோயா சாஸ் – ½ தேக்கரண்டி 

செய்முறை

1. ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. எண்ணெய் சூடானதும்  அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனை ஒரு நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ளவும்.

4. 20 குட்டி இட்லிகளை சேர்த்துக் கொள்ளவும், பெரிய இட்லி பயன்படுத்துவதாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பின்னர் பயன்படுத்தவும்.

5. குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.  பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

6. ஒரு கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 

7. எண்ணெய் சூடானதும்  2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

8. வெங்காயம் வதங்கி வந்த பின்னர்,  1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

9. அதனுடன்  சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.

10. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.   பின்னர் 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

11. அதனுடன் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½  தேக்கரண்டி கரம் மசாலா, ¼  தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

12. அதனை 1 நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.  பின்னர் 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

13. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.

14. பின்னர் 1 தேக்கரண்டி டொமேட்டோ கெட்சப் மற்றும் 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.

15. அதனை நன்றாக கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள இட்லியை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

16. 2 நிமிடங்களுக்கு பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும். சுவையான சில்லி மசாலா இட்லி தயார். 

Leave a Reply