See this Recipe in English
மிக்சர் மாலை நேரங்களில் காபி டீயுடன் மிகவும் சுவையாக இருக்கும். கரகர மொறுமொறு மிக்ஸர் காரசாரமாக பலவிதமான பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இது பலவிதமான பொருட்களை போட்டு செய்தால் நமது விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு, வேர் கடலை, போன்றவை சற்று கூடுதலாக சேர்த்து செய்தால் அனைவரும் விரும்புவார்கள், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே செய்துவிடக்கூடிய இதனை, 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். சுவையான மிக்சர் இந்த தீபாவளிக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான மிக்ஸர் செய்ய சில குறிப்புகள்
- மிக்ஸரில் சேர்க்கும் ஓமப்பொடி செய்யும்போது ஓமம் சேர்க்கத் தேவை இல்லை. நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு ஓமத்தை மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை ஓமப்பொடி மாவுடன் கலந்து பிசையவும்.
- பூந்தி, ஓமப்பொடி செய்யும்பொழுது தீயை சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும், பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
- கீழே கொடுக்கப்பட்டவற்றைத் தவிர சாரப்பருப்பு, கார்ன் பிளக்ஸ்,கொப்பரை தேங்காய், காய்ந்த பட்டாணி, போன்றவற்றையும் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
- உப்பு மற்றும் காரம் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- கருவேப்பிலை பொறிக்கும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு பொரிக்கவும்.
இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா, தட்டை முறுக்கு, பூந்திலட்டு, முறுக்கு, சாக்லேட் பர்ஃபி, குலாப் ஜாமுன், இனிப்பு காஜா, ரவா லட்டு, கோதுமை குலாப் ஜாமுன், பால்கோவா
See this Recipe in English
தேவையான பொருட்கள்
ஓமப்பொடி
- கடலை மாவு – ½ கப் – 50g
- அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத் தூள் – ¼ தேக்கரண்டி
- சமையல்எண்ணை – பொறிக்க தேவையான
பூந்தி
- கடலை மாவு – ½ கப் – 50g
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத் தூள் – ¼ தேக்கரண்டி
- பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
இதர பொருட்கள்
- வேர்கடலை – ¼ கப் – 30g
- முந்திரி பருப்பு – ¼ கப் – 35g
- பூண்டு பல் – 10
- பொட்டுக்கடலை – ¼ கப் – 30g
- அவல் – ¼ கப் – 35g
- கருவேப்பிலை – சிறிதளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- உப்பு – 1/4 தேக்கரண்டி/தேவையான அளவு
- மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி/தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஓமப்பொடி
1. ஒரு பாத்திரத்தில் ½ கப் கடலை மாவு, 2 மேஜை கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ¼ தேக்கரண்டி பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
2. ஒரு முறை கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
3. முறுக்கு உரலில் எண்ணெய் தடவி, அதில் இடியாப்ப அச்சு வைத்து மாவை நிரப்பி கொள்ளவும். சமையல் எண்ணையை மிதமான தீயை விட சற்று கூடுதலாக வைத்து சூடாக்கி பின்னர் ஓமப்பொடியை பிழியவும்.
4. 2 நிமிடங்களுக்குப் பின்னர் திருப்பி போடவும்.
5. சலசலப்பு அடங்கி பொன்னிறமானதும் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.
பூந்தி
1. ஒரு பாத்திரத்தில் ½ கப் கடலை மாவு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி பெருங்காயத் தூள், 1 சிட்டிகை பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
2. ஒருமுறை கலந்து பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
3. சமையல் எண்ணையை மிதமான தீயை விட சற்று கூடுதலாக வைத்து சூடாக்கி பின்னர் பூந்தி கரண்டி அல்லது அரி கரண்டியில் சிறிதாக மாவை ஊற்றி தேய்க்கவும்.
4. சலசலப்பு அடங்கி பொன்னிறமானதும் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.
5. அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். ¼ கப் வேர்க்கடலை சேர்த்து பொரிக்கவும் பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
6. ¼ கப் முந்திரி பருப்பு சேர்த்து பொரிக்கவும் பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
7. 10 பல் பூண்டை நசுக்கி சேர்த்துக்கொள்ளவும், ஓரளவு பொன்னிறமானதும்எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
8. ¼ கப் பொட்டுக்கடலை சேர்த்து பொரிக்கவும் பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
9. ¼ கப் அவல் சேர்த்து கொள்ளவும், பொரிந்த பின்னர் பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
10. கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து பொரித்து தனியே வைக்கவும்.
11. ஒரு அகலமான பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள ஓமப்பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
12. அதனை கையால் உடைத்து விடவும்.
13. அதனுடன் தயார் செய்து வைத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
14. அதில் ¼ தேக்கரண்டி உப்பு மற்றும் ¼ தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
15. நன்றாக கலக்கவும், இதனை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம். சுவையான மிக்சர் தயார்.