Pottukadalai Murukku | பொட்டுக்கடலை முறுக்கு | Murukku Recipe | how to make murukku

பொட்டுக்கடலை முறுக்கு தீபாவளிக்கு செய்யப்படும் பாரம்பரியமிக்க முறுக்கு வகை. இந்தியாவில் பல விதமான முறுக்கு வகைகள் செய்யப்படுகிறது. உளுந்து முறுக்கு, கைமுறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு என ஏராளமான வகைகள் உள்ளது. பொட்டுக்கடலை முறுக்கு மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான முறுக்கு. அரிசி மாவு மற்றும் பொட்டுக் கடலை ஆகியவை இருந்தாலே போதும் மிகச் சுவையான முறுக்கு சில நிமிடங்களில் செய்யலாம்,  சுவையான பொட்டுக்கடலை முறுக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பொட்டுக்கடலை முறுக்கு செய்ய சில குறிப்புகள்

  • அரிசி மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு இரண்டையும் சலித்து பயன்படுத்தவும்.
  • வெண்ணை உருக்கிய பின்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • அதிகமாக வெண்ணை சேர்த்தால் முறுக்கு உடைந்து விழும் வாய்ப்புள்ளது.
  • மாவு கெட்டியாக இருந்தால் முறுக்கு செய்ய முடியாது, தண்ணீர் தெளித்து பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஓமம் சேர்ப்பதற்கு பதிலாக சீரகம் அல்லது கருப்பு எள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • எண்ணெயில் பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
  • பொட்டுக்கடலை முறுக்கு பொன்நிறமாக வராது,  ஓரளவிற்கே சிவந்து வரும்.
  • முறுக்கு செய்த பின்னர் நன்கு ஆற வைத்து, கண்டெய்னரில் மூடி வைக்கலாம். ஒரு வாரம் வரை மொறு மொறுப்பாக இருக்கும்.

இதர தீபாவளி பலகாரங்கள் –  தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

 

தேவையான பொருட்கள்

  • பொட்டுகடலை –  1/4 கப்
  • அரிசி மாவு – 1 கப்
  • பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
  • ஓமம் –  3/4 தேக்கரண்டி
  • உருக்கிய வெண்ணெய் –  1 மேஜைக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

2. அதனை ஒரு சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.

3. அதனுடன் ஒரு கப் அரிசிமாவு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

4. பின்னர் 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்,  3/4 தேக்கரண்டி ஓமம்,  1 மேஜைக்கரண்டி உருக்கிய வெண்ணெய், தேவையான அளவு உப்பு  ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

5. பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

6. நன்கு பிசைந்த பின்னர் மூடி வைக்கவும்.

7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். தேன்குழல் முறுக்கு அச்சு எடுத்து கொள்ளவும்.  முறுக்கு உரலில் எண்ணெய் தடவி வைக்கவும்.

8. தயார் செய்து வைத்துள்ள மாவை போட்டு ஒரு நீளமான கரண்டியில் முறுக்கு பிழியவும்.

 9. இப்பொழுது எண்ணையில் சேர்த்து பொரிக்கவும்.

10. நுரை ஓரளவு அடங்கிய பின்னர் திரும்பி போடவும்.

11. நுரை அடங்கிய பின்னர் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.

12. சுவையான பொட்டுக்கடலை முறுக்கு தயார்.

Leave a Reply