Boondi Laddu in Tamil | பூந்திலட்டு | Laddu recipe in Tamil | How to make laddu

See this Recipe in English

பூந்தி லட்டு கடலை மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை.  லட்டுகளில் பல வகை உண்டு அவற்றில் பூந்தி லட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடலை மாவு கொண்டு பூந்தி செய்து அதனை சர்க்கரை பாகில் ஊற வைத்து பின்னர் உருட்ட வேண்டும். சுவையான பூந்தி லட்டு தீபாவளி போன்ற விழா காலங்களில் செய்யப்படுகிறது.

சுவையான பூந்தி லட்டு செய்ய சில குறிப்புகள்

பூந்தி மாவு – பூந்தி மாவு கெட்டியாக இருந்தால் பூந்தி அழுத்தமாக வரும்,  நீர்த்து இருந்தால் எண்ணெயில் ஊற்றும்போது கரைந்துவிடும்,  பூந்தி மாவை மிதமாக கரைத்துக் கொள்ளவும்.  பூந்தி செய்வதற்கு மாவு கலக்கும் பொழுது கண்டிப்பாக சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும் அப்பொழுதுதான்  பூந்தி முத்து முத்தாக வரும். கடலை மாவு கரைக்கும் போது கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும், சிறு சிறு கட்டிகள் இருந்தால் சிறுது நேரம் மாவை அப்படியே வைத்துவிட்டு பின்னர் கலக்கவும்,  கட்டிகள் கரைந்துவிடும்.

நிறம் – லட்டு செய்வதற்கு மஞ்சள் நிறம் சேர்த்துள்ளேன், மஞ்சள் நிறத்திற்கு பதிலாக ஆரஞ்சு நிறம், பச்சை நிறம் ஆகியவற்றை கலந்து செய்யலாம். 

பாகு பதம் – சர்க்கரைப்பாகு செய்யும்பொழுது ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்,  ஒரு கம்பி பதம் தாண்டி இரண்டு கம்பி பதம் வந்தால் லட்டு கடினமாக இருக்கும்.

பூந்தி – பூந்தி பொரிப்பதற்கு எண்ணெய் வைக்கும் பொழுது மிதமான சூட்டை விட சற்று கூடுதலாக வைக்கவும். பூந்தியை அதிக நேரம் பொரித்தால் காராபூந்தி போன்று மொறுமொறுப்பாக இருக்கும் மிகக் குறைவான நேரம் பொரித்தால் உள்ளே வேகாமல் இருக்கும். 20 முதல் 30 வினாடிகள் பொரித்தால் போதுமானது. பூந்தி கரண்டி க்கு பதிலாக வீட்டில் இருக்கும் அரி கரண்டி பயன்படுத்தி பூந்தி செய்யலாம். 1 முறை  பூந்தி போட்ட பிறகு கரண்டியை கழுவி விட்டு துணியால் நன்கு துடைத்து விடவும். இவ்வாறு செய்யும்பொழுது மறுமுறை பூந்தி  பந்துபோல முத்து முத்தாக வரும்.

லட்டு –  முந்திரி திராட்சையை வறுத்து சேர்க்கும்போது அதனுடன் சிறிதளவு கல்கண்டு, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். நன்றாக ஆறிய பின்னர் லட்டு பிடிக்க முடியாது அதனால் கை பொறுக்கும் சூட்டில் லட்டுகளை உருட்டிக் கொள்ளவும். லட்டு செய்த பிறகு 3 – 4 மணி நேரம் கழித்து பரிமாறினால் பூந்தி சர்க்கரை பாகை நன்கு  உறிந்து சுவை நன்றாக இருக்கும்.

 

 

See this Recipe in English

மேலும் பலவிதமான உணவுகளை காண கீழே கிளிக் செய்யவும்

பூந்தி லட்டு செய்ய தேவையான பொருட்கள்

  •  கடலைமாவு – 2 கப்
  •  மஞ்சள் நிறம்  – 1  சிட்டிகை
  •  பேக்கிங் சோடா – 1  சிட்டிகை
  •  எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு
  •  சர்க்கரை –  1.5 கப்
  •  தண்ணீர் –  1 கப்
  •  ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
  •  முந்திரி  – 10
  •  காய்ந்த திராட்சை  – 10 -15
  •  நெய் –  1 தேக்கரண்டி

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2  கப் கடலைமாவு சேர்க்கவும்.

2. 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்கவும்.

3. 1 சிட்டிகை மஞ்சள் நிறம் சேர்த்து கலக்கவும்.

 4. அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

5. கட்டிகள் இல்லாமல் மென்மையாக கரைத்துக்கொள்ளவும். 

6. பூந்தி செய்வதற்கு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். ஒரு பூந்தி கரண்டி அல்லது ஜல்லி கரண்டியில் சிறிது சிறிதாக மாவை போட்டு தேய்க்கவும்.

7. முத்து முத்தாக எண்ணெயில் விழுவதை காணலாம்.

8. 20 முதல் 30 வினாடிகளுக்கு பிறகு எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

9. 1 முறை  பூந்தி போட்ட பிறகு கரண்டியை கழுவி விட்டு துணியால் நன்கு துடைத்து விடவும்.

10. எல்லா மாவிலும் பூந்தி செய்து ஒரு கிச்சன் பேப்பரில் வைத்து எண்ணெயை வடித்துவிடவும்.

11. ஒரு பாத்திரத்தில் 1.5 கப் சர்க்கரை சேர்க்கவும்.

12. 1 கப் தண்ணீர் சேர்த்து 5 -8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

12. அதனுடன் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

13. 1 கம்பி பதம் வரும் வரை சர்க்கரை பாகு காய்ச்சவும்.

 14. இப்பொழுது தயாராக உள்ள  பூந்தி சேர்த்து கிளறவும்.

15. 1 கப் பூந்தியை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து  கொள்ளவும். அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

15. ஒரு சிறிய வாணலியில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

16. வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை  பூந்தி உடன் சேர்த்து கலக்கவும்.

17. இடித்து வைத்துள்ள பூந்தியை பூந்தி கலவையுடன் சேர்க்கவும்.

18. எல்லாவற்றையும் நன்கு கலந்து 10 நிமிடங்களுக்கு ஆறவைக்கவும். ஓரளவு ஆறிய பின்னர் விருப்பப்பட்ட அளவில் உருட்டி கொள்ளவும்.

19. சுவையான பூந்தி லட்டு தயார்.

 

This Post Has One Comment

Leave a Reply