See this Recipe in English
பழ சர்பத் விதவிதமான பழங்களை கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும், செய்யக்கூடிய உணவு வகை. இதை வெய்யில் காலங்களில் உண்ணும் பொழுது சுவையாகவும் இருக்கும் அதே சமயத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சேர்ப்பதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில்களில் கிடைக்கும் பல நாள் பாதுகாத்து வைக்கப்படுகின்ற குளிர்பானங்களை காட்டிலும் இதுபோன்ற வீட்டில் சுத்தமாகவும், சுவையாகவும் செய்யப்படுகின்ற பானங்களை குடிக்கும் போது உடலையும் ஆரோக்கியமாக வைக்கும், தேவையற்ற செலவையும் குறைக்கலாம். சுவையான பழ சர்பத் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பழ சர்பத் செய்ய சில குறிப்புகள்
- பழ சர்பத் செய்யும் பொழுது கீழே குறிப்பிட்டுள்ள பழங்களைத் தவிர நீங்கள் விருப்பப்பட்ட பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- தேங்காய் பாலுக்கு பதிலாக பசும்பால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- தேங்காய்பால் பயன்படுத்தினால் கடைகளில் கிடைக்கும் அல்லது வீட்டில் செய்த தேங்காய் பால் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்துள்ளேன் அதற்கு பதிலாக சர்க்கரை, வெல்லம், அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம் அல்லது எதுவும் சேர்க்காமலும் இந்த சர்பத் செய்யலாம்.
- பழங்களை சேர்ப்பதற்கு முன் விதைகளை நீக்கி விட்டு சேர்க்கவும், தேவைபட்டால் தோலையும் நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இதர வகைகள் – ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
சர்பத்
- பால் – 1 கப் – 250ml
- தேங்காய் பால் – ½ கப் – 125ml
- மாம்பழம் – 1
- தேன் – 2 மேஜைக்கரண்டி
பழங்கள்
- ஆப்பிள் – 1
- திராட்சை – 20
- ஆரஞ்சு – 1
- மாம்பழம் – 1
- தர்பூசணி – 1
- மாதுளை முத்துக்கள் – சிறிதளவு
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை
1. சர்பத் செய்வதற்கு ஒரு பிளண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் 1 மாம்பழத்தை தோல் நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
2. 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 1 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்.
4. அதை கட்டிகளில்லாமல் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
5. அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.
6. அதனுடன் ½ கப் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளவும்.
7. ஒரு முறை நன்றாக கலக்கவும்.
8. இப்பொழுது மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை விதைகளை நீக்கி விட்டு தேவைப்பட்டால் தோல் நீக்கி விட்டு சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
9. அதை ஒவ்வொன்றாக சர்பத் உடன் சேர்த்து கலக்கவும்.
10. சர்பத் மிகவும் திக்காக இருந்தால் சிறிதளவு ஐஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும்.
11. சுவையான பழ சர்பத் தயார், டம்ளரில் ஊற்றி பரிமாறலாம்.