ஜிகர்தண்டா மதுரை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது, ஆனால் இது மதுரையில் கிடைக்கும் அதே சுவையில் பிற ஊர்களில் கிடைப்பதில்லை, சுவையான ஜிகர்தண்டா சாப்பிட மதுரை செல்ல வேண்டியதில்லை, அதனை மிகவும் சுலபமான முறையில் உங்கள் வீட்டிலேயே செய்யலாம். ஜிகர்தண்டா செய்வதற்கு பாதாம் பிசின் மிகவும் முக்கியமான பொருள். இது இல்லாமல் ஜிகர்தண்டா செய்ய முடியாது, இது எல்லா மளிகை கடைகளிலும் கிடைக்கக்கூடிய பொருள், இது தவிர மற்ற பொருட்கள் நாம் எப்போதும் வீட்டில் பயன்படுத்தக் கூடிய பால், சர்க்கரை போன்றவை மட்டுமே. சுவையான ஜிகர்தண்டா நீங்களும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான ஜிகர்தண்டா செய்ய சில குறிப்புகள்
- பாதாம் பிசின் ஊற வைக்கும் போது 10 முதல் 12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் விருப்பப்பட்டால் இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
- வீட்டில் செய்த க்ரீம் பயன்படுத்தலாம் அல்லது வேலையை சுலபமாக செய்ய கடைகளில் கிடைக்கும் வெண்ணிலா ஐஸ்கிரீம் பயன்படுத்தியும் ஜிகர்தண்டா செய்யலாம்.
- நன்னாரி சர்பத் சேர்த்து ஜிகர்தண்டா செய்யும் பொழுது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
- முழுக் கொழுப்புள்ள கெட்டியான பால் பயன்படுத்தி ஜிகர்தண்டா பால் செய்யவும்.
இதர வகைகள் – பழ சர்பத், ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.
ஜிகர்தண்டா செய்ய தேவையான பொருட்கள்
- பாதாம் பிசின் – 4 – 5
- சர்க்கரை – 1 கப் – 200g
- பால் – 1 லிட்டர் + 1 கப்
- நன்னாரி சர்பத் – 3 மேஜைக்கரண்டி
- பால்கோவா – 200g
- பிரஷ் கிரீம் – 1/2 கப் – 125ml
செய்முறை
1. ஒரு சிறிய கப்பில் 4 – 5 துண்டுகள் பாதாம் பிசின் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 முதல் 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
3. கேரமல் செய்வதற்கு ஒரு பேனில் 100 கிராம் சர்க்கரையை பரவலாக தூவி கொள்ளவும்.
4. குறைவான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
5. பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். கொதித்த பின்னர் தனியே எடுத்து வைத்து ஆறவைக்கவும்.
6. ஐஸ்கிரீம் செய்வதற்கு ஒரு பிலண்டர் அல்லது மிக்சி ஜாரில் 100 கிராம் பால்கோவா சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1/2 கப் பிரஷ் கிரீம் சேர்த்துக் கொள்ளவும்.
7. பின்னர் 2 தேக்கரண்டி கேரமல் சேர்த்துக் கொள்ளவும்.
8. கடைசியாக 1 கப் பால் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
9. அரைத்த கலவையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொட்டி 2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
10. 2 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் மிக்ஸியில் சேர்த்து அதனை 1 நிமிடத்திற்கு அரைக்கவும்.
11. நன்றாக அரைத்து பின்னர் மீண்டும் அதே டப்பாவில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் வரை ஃப்ரீஸரில் வைக்கவும்.
12. 6 மணி நேரத்திற்குப் பிறகு சுவையான ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயார்.
13. ஒரு பானில் 1 லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
14. ஓரங்களில் இருக்கும் ஆடையை எடுத்து பாலுடன் சேர்த்து 1/2 லிட்டராக ஆகும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
15. பின்னர் அதில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
16. சர்க்கரை நன்றாகக் கரைந்து பின்னர் தயார் செய்து வைத்துள்ள கேரமல் 1/2 கப் சேர்த்துக் கொள்ளவும்.
17. 2 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடவும். நன்றாக ஆறிய பின்னர் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
18. பாதாம் பிசின், ஐஸ்கிரீம், கேரமல், பால் ஆகியவை தயாரானதும் ஒரு கிளாஸில் 2 மேஜைக்கரண்டி பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ளவும்.
19. அதனுடன் 2 மேஜைக்கரண்டி நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும்.
20. பின்னர் தயார் செய்து வைத்துள்ள பாலை சேர்க்கவும்.
21. ஒருமுறை நன்றாக கலக்கவும்.
22. அதன்மீது 1 கரண்டி ஐஸ்கிரீம் வைக்கவும்.
23. கடைசியாக அழகுக்காக சிறிதளவு கேரமல் சாஸ் ஊற்றவும். சுவையான மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா தயார்.