See this Recipe in English
பால் சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம். வெயில் காலத்திற்கு இது மிகவும் ஏற்றது. வெயில் அதிகமாக இருப்பதால் கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும் வண்ணமயமான பொடிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் குளிர்பானம் ஆகியவற்றில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏராளமாக இருக்கும். அதற்கு பதிலாக இது போன்ற வீட்டிலேயே சுத்தமாக செய்யப்பட்ட , சத்தும் நிறைந்த குளிர்பானங்களை செய்து குடிப்பதால் உடல் ஆரோக்கியமும் மேம்படும் சுவையும் அபாரமாக இருக்கும். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பால் சர்பத்தை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பால் சர்பத் செய்ய சில குறிப்புகள்
- பால் சர்பத் செய்வதற்கு முழு கொழுப்பு சத்துள்ள கெட்டியான பால் பயன்படுத்திக் கொள்ளவும்.
- பாதாம் பிசினை 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைத்து பின்னர் பயன்படுத்தவும்.
- பாதாம் முந்திரி பிஸ்தா தவிர நீங்கள் விருப்பப்பட்ட நட்ஸ் வகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்,
- ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- குங்குமப்பூ மற்றும் டூட்டி ஃப்ரூட்டி போன்றவற்றை நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை சேர்க்காமலும் பால் சர்பத் செய்யலாம்
- பால் சர்பத்தை செய்து முடித்த பிறகு 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம் அல்லது சிறிதளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம்.
இதர வகைகள் – பழ சர்பத், ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா
See this Recipe in English
பால் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 1 லிட்டர்
- பாதாம் பிசின் – 3
- துளசி விதைகள் – 2 தேக்கரண்டி
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
- பால் – குங்குமப்பூ ஊறவைக்க சிறிதளவு
- சர்க்கரை – ½ கப்
- நன்னாரி சர்பத் – 1 தேக்கரண்டி
- டூட்டி ஃப்ரூட்டி – ¼ கப்
- முந்திரி பருப்பு – 10
- பாதாம் – 10
- பிஸ்தா – 10
செய்முறை
1. ஒரு கப்பில் 3 துண்டு பாதாம் பிசின் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 முதல் 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
3. ஒரு கப்பில் 2 தேக்கரண்டி துளசி விதைகளை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
4. ஊறிய பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.
6. மிதமான தீயில் வைத்து பால் 600ml வரை வற்றி வரும் வரை காய்ச்சிக் கொள்ளவும்.
7. பின்னர் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
8. அதனுடன் ஒரு சிட்டிகை குங்குமப் பூவை பாலில் ஊறவைத்து சேர்த்துக் கொள்ளவும்.
9. 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
10. 1 தேக்கரண்டி நன்னாரி சர்பத் சேர்த்துக் கொள்ளவும்.
11. அதனுடன் 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளவும்.
12. இப்பொழுது 10 முந்திரிப் பருப்பு, பிஸ்தா மற்றும் பாதாம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
13. பின்னர் ஊற வைத்துள்ள பாதாம் பிசினை சேர்த்துக்கொள்ளவும்.
14. கடைசியாக துளசி விதைகளை சேர்த்து கிளறவும்.
15. 2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறலாம்.
16. சுவையான பால் சர்பத் தயார்.