See this Recipe in English
வெண்டைக்காய் வறுவல் ஒரு சுவையான உணவு வகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய உணவுடன் சுவையாக இருக்கும். இது கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. வெண்டைக்காய் வறுவல் பலவிதமாக செய்யப்படுகிறது ஆனால் கடலை மாவு கொண்டு செய்வதே சுவையாக இருக்கும்.
தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். வெண்டைக்காய் பொரியல் செய்ய 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் இதுபோன்ற வறுவல் செய்தால், 10 – 15 நிமிடத்திற்குள் செய்துவிடலாம்.
சுவையான வெண்டைக்காய் வறுவல் செய்ய சில குறிப்புகள்
- வெண்டைக்காய் வறுவல் செய்ய பிஞ்சு வெண்டைக்காய்களை பயன்படுத்தவும் அல்லது வருவல் சுவையாக இருக்காது.
- காரத்திற்கேற்றவாறு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துள்ளேன், அதில் அதிக காரம் இருக்காது. விருப்பப்பட்டால் சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வெண்டைக்காய் வறுவல் மேலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
- வெண்டைக்காயில் மாவு சேர்த்து பிசையும் பொழுது வெண்டைக்காயின் ஈரப்பதத்துடன் சேர்த்து பிசையவும் அப்போது மாவு எளிதாக ஒட்டிக்கொள்ளும்.
- ஒருவேளை உங்கள் வெண்டைக்காய் ஈரப்பதம் குறைவாக இருந்தால் 2 – 3 தேக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – பாசிப்பருப்பு ஃப்ரை, சிக்கன் வறுவல் , காலிஃப்ளவர் 65, காலிபிளவர் வறுவல், பில்டர் காபி, சாக்லேட் காபி,காராபூந்தி, தயிர் வடை, வாழைப்பூ வடை, உடனடி மெதுவடை, மொரு மொரு வடை, சாம்பார் வடை, மெதுவடை, மிக்சர்.
வெண்டைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
- 300 கிராம் வெண்டைக்காய்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 1/4 கப் கடலைமாவு
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- தேவையான அளவு உப்பு
- எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. வெண்டைக்காயை தண்ணீரில் அலசி ஒரு துணியால் துடைத்து எடுத்து வைக்கவும்.
2. இப்போது அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. பின்னர் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
4. 2 தேக்கரண்டி 2 tsp அரிசி மாவு மற்றும் 1/4 cup கடலை மாவு சேர்த்து கலக்கவும்.
5. தேவைப்பட்டால் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
6. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயாராக வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு பொரிக்கவும்.
7. மிதமான சூட்டில் வைத்து அவ்வபோது கிளறி கொள்ளவும்.
8. பொன்னிறமானதும் எண்ணெயை வடித்துவிட்டு ஒரு கிச்சன் பேப்பரில் வைக்கவும். சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.