பாவ் பன் மிகவும் மென்மையான டீ கடைகளில் கிடைக்கக்கூடிய பால்பன் போன்று சுவையாக இருக்கும். பால், சர்க்கரை, வெண்ணை, மைதா மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. இதனை பாலில் தொட்டு பால்பன் ஆக பயன்படுத்தலாம், அல்லது உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, மசாலா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
இது பாவ் பாஜி என வட இந்தியாவில் அழைக்கப்படுகிறது, இதுதவிர வெண்ணை தடவி தோசை கல்லில் இட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து 2 நிமிடங்களுக்கு பிறகு எடுத்தால் ஜாம் அல்லது டொமேட்டோ சாஸ் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மென்மையான பாவ் பன் செய்ய சில குறிப்புகள்
- பன் செய்வதற்கு தரமான ஈஸ்ட்(yeast) பயன்படுத்தவும், அப்பொழுது பன் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
- இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு வெதுவெதுப்பான பகுதியில் மாவை வைக்கவும், நன்றாக உப்பி வரும்.
- இதே செய்முறையில் மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம்.
- ஈஸ்ட் செயல்படுத்துவதற்கு வெதுவெதுப்பான பால் பயன்படுத்தவும், சூடான அல்லது ஆறிப்போன பால் பயன்படுத்தினால் ஈஸ்ட் வேலை செய்யாது.
- பன் மாவு பிசையும்போது சப்பாத்தி மாவு போல கெட்டியாக இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் மாவு கெட்டியாக இருந்தால் பன்அழுத்தமாக இருக்கும்.
- பன் செய்வதற்கு பால் பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களில் பயன்படுத்தவும் அல்லது பிரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- நான் wet yeast எனப்படும் ஈரப்பதமுள்ள ஈஸ்ட் பயன்படுத்தியுள்ளேன், இதற்கு பதிலாக நீங்கள் ஒரு பாக்கெட் dry yeast (7 grams or 2 1/4 tsp) பயன்படுத்திக் கொள்ளலாம். இது எல்லா கடைகளிலும் கிடைக்கும். இவை இரண்டும் ஈஸ்ட் வகைகள், சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.
இதர வகைகள் – வெஜிடபிள் பர்கர், தவா பர்கர், சிக்கன் பர்கர், பர்கர் வடை, முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்.
பன் செய்ய தேவையான பொருட்கள்
ஈஸ்ட் செயல்படுத்த தேவையான பொருட்கள்
- ஒரு பாக்கெட் active dry yeast அல்லது ¼ of 2 ounce wet yeast
- கால் கப் வெதுவெதுப்பான பால்
- 2 தேக்கரண்டி சர்க்கரை
பன் மாவு செய்ய தேவையான பொருட்கள்
- 3 கப் மைதா மாவு
- கால் கப் பால் பவுடர்
- 2 தேக்கரண்டி உப்பு
- 2 கப் பால்
- இரண்டு தேக்கரண்டி வெண்ணெய்
- எண்ணெய் அல்லது வெண்ணெய் சிறிதளவு
செய்முறை
1. ஒரு சிறிய பாத்திரத்தில், 1 பாக்கெட் active dry yeast அல்லது ¼ of 2 ounce wet yeast சேர்த்துக் கொள்ளவும்.
2. இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
3. நன்கு கலந்த பின்னர் கால் கப் அளவு வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
4. பத்து நிமிடங்களுக்கு தனியே வைக்கவும் அப்போது ஈஸ்ட் நன்கு பொங்கி வரும்.
5. ஒரு அகலமான பாத்திரத்தில், 3 கப் மைதா மாவு, கால் கப் பால் பவுடர், மற்றும் 2 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
6. அதனுடன் பொங்கி வந்துள்ள ஈஸ்ட் கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
7. மீண்டும் ஒரு முறை கலந்த பின்னர், 2 கப் பால் சேர்த்துக் பிசைந்து கொள்ளவும்.
8. இப்பொழுது மாவு பிசையும் போது பிசு பிசுப்பு தன்மையுடன் இருக்கும்.
9. தொடர்ந்து 12 – 15 நிமிடங்களுக்கு பிசையவும்.
10. பின்னர் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து மீண்டும் பிசையவும்.
11. இப்பொழுது மாவு மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.
12. மற்றொரு பௌலில் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி அதனுள் பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து ஒரு துணி கொண்டு மூடவும்.
13. மாவு பொங்கி வரும் வரை அல்லது இரண்டு மணி நேரம் வைக்கவும்.
14. இப்பொழுது மாவு இரண்டு மடங்காக பொங்கி இருக்கும், மீண்டும் ஒருமுறை பிசையவும்.
15. இப்பொழுது அதனை 16 சமமான சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.
16. அதனை வெடிப்புகள் இல்லாமல் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
17. 10 இஞ்ச் அகலமுள்ள கேக் பானில் (cake pan) சிறு இடைவெளியுடன் வைக்கவும்.
18. மீண்டும் ஒரு துணி கொண்டு மூடி வைக்கவும், இப்பொழுது ஒரு மணி நேரம் வரை வைக்கவும்.
19. இப்பொழுது ஒரு பிரஸ்ஸில் பால் தொட்டு பன் மீது தடவவும்.
20. ஓவன் 180 C /360 F ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும், Oven உள்ளே வைத்து 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பின்னர் உடனே வெளியே எடுத்து வெண்ணை தொட்டு மீண்டும் ஒருமுறை எல்லா பன் மீதும் தடவவும்.
21. ஆறியவுடன் பாவ்பாஜி மசாலா, வெண்ணை அல்லது ஜாம் ஆகியவற்றுடன் பரிமாறவும். சுவையான பாவ் பன் தயார்.