Pizza in Tamil | Pizza without Oven in Tamil | ஓவன் இல்லாமல் பீட்சா | Pizza recipe in Tamil

See this Recipe in English

வெஜ் பீட்சா பீட்சா  உலகம்  முழுவதும்  பிரபலமான  உணவு வகை, ஆனால் முன்னெப்பொழுதையும் விட  தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பீட்சா மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மைதா மாவு, ஈஸ்ட் (yeast), சீஸ் (cheese), தக்காளி சாஸ் (sauce),   காய்கறிகள்,  ஆகியவற்றை கொண்டு  பீட்சா செய்யப்படுகிறது.  பொதுவாக பீட்சாவை ஓவனில் வைத்து பேக் செய்ய வேண்டும் அது தவிர பேன் பீசா (pan pizza) என்பது  ஓவன் இல்லாமல் அடுப்பில் வைத்து செய்யக்கூடியது,  இதுதவிர ஓவன் இல்லாதவர்கள் இட்லி பாத்திரம் போன்று பெரிய பாத்திரத்தில் வைத்து பீட்சா செய்யலாம்.

பீட்சாவில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளது, பீட்சா மாவு (pizza dough),  பீசா சாஸ் (pizza sauce)  மற்றும் டாப்பிங்ஸ் (toppings). இவை அனைத்தையுமே நம் வீட்டிலேயே செய்யலாம்,  ஈஸ்ட்,  சீஸ்  ஆகியவற்றை தவிர்த்து பார்த்தால் மற்றவை பொதுவாக நம் வீட்டிலேயே இருக்கக் கூடிய பொருட்கள்.  காய்கறிகள் தவிர்த்து சிக்கன்,  சாசேஜ் (sausage),  ஆகியவற்றைக் கொண்டு பீட்சா செய்யலாம். 

சுவையான பீட்சா செய்ய சில குறிப்புகள்

  • மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு சேர்த்தும் இதே முறையில் பீட்சா மாவு செய்யலாம்.
  • ஈஸ்ட் சேர்க்கும் பொழுது தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்,  அதிக சூடாகவோ அல்லது ஆறி இருந்தால் ஈஸ்ட் வேலை செய்யாது.
  • பீட்சா மாவு பிசையும் பொழுது நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு ஆலிவ் ஆயில் (olive oil) அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.
  • பீசா சாஸ் செய்யும்பொழுது லேசான இனிப்பு சுவைக்கு சர்க்கரை சேர்த்து உள்ளேன்.  விருப்பப்பட்டால் சேர்க்கலாம் அல்லது சர்க்கரை சேர்க்காமலும் செய்யலாம் அல்லது குறைவாக சேர்த்துக்கொள்ளலாம். 
  • பொதுவாக பீட்சாவிற்கு  மொஸெரெல்லா சீஸ் பயன்படுத்தப்படும்,  அதனுடன்  செடார் சீஸ் சேர்த்தும் பீட்சா செய்யலாம். 
  • குடைமிளகாய்,  வெங்காயம், ஆலிவ் , தவிர  மஸ்ரூம்,  அண்ணாச்சி பழம்,  பன்னீர்,  பசலைக்கீரை, தக்காளி ஆகியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, பீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர், வெஜிடபிள் பர்கர் .

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

பீட்சா மாவு 

  • வெதுவெதுப்பான தண்ணீர் – ½ கப் – 125ml
  • சர்க்கரை – 1  மேஜை கரண்டி
  • ஈஸ்ட் – 1  தேக்கரண்டி
  • மைதா மாவு – 1 கப் – 140g
  • உப்பு –   தேவையான அளவு

பீசா சாஸ்

  • சமையல் எண்ணை – 1  தேக்கரண்டி
  • தக்காளி – 2
  • தக்காளி சாஸ் – 2  தேக்கரண்டி 
  • இத்தாலியன் சீஸனிங் (Italian Seasoning) – 1 தேக்கரண்டி 
  • சர்க்கரை – 2  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு

இதர பொருட்கள்

  • மொஸெரெல்லா சீஸ் – தேவையான அளவு
  • குடைமிளகாய் –  தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் –  தேவையான அளவு
  • ஆலிவ் – தேவையான அளவு
  • மிளகாய் வற்றல் (Chilli flakes) –  சிறிதளவு 

செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில்  ½  கப் வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 1  மேஜை கரண்டி சர்க்கரை, 1  தேக்கரண்டி  ஈஸ்ட்,  ஆகியவற்றை சேர்த்து  கலக்கவும்.

2. 10 – 15 நிமிடங்களுக்கு அதனை தனியே வைக்கவும்.

3. ஒரு பவுலில்  1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

4. ஈஸ்ட் பொங்கி வந்த உடன் அதனை சேர்த்துக் கொள்ளவும்.

5. சப்பாத்தி மாவு போன்று மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

6. பவுலில் எண்ணெய் தடவி மாவை வைத்து மூடி வைக்கவும், அதனை 1 – 2 மணி நேரம்வரை வைக்கலாம்.

7. பீட்சா சாஸ் செய்வதற்கு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1  தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 

8. எண்ணெய் சூடானதும் 2  தக்காளி பழங்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

9. அதனை எண்ணெயில் ஊற்றி 2 – 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

10. பின்னர் 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.

11. அதனுடன் 1 தேக்கரண்டி இத்தாலியன் சீஸனிங் சேர்க்கவும்.

12. அதனுடன் 2  தேக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 – 6 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

13. சாஸ் ஒரளவு திக்கானதும் தனியே எடுத்து வைக்கவும்.

14. 2  மணி நேரத்திற்கு பிறகு மாவு உப்பி வந்ததும் அதனை மீண்டும் ஒருமுறை பிசைந்து கொள்ளவும்.

 

15. பின்னர் ஒரு சிறிய தட்டில் எண்ணெய் தடவி மாவை விரித்துக் கொள்ளவும். ஓரங்களில் தடிமனாக வைத்துக் கொள்ளவும்.

16. முள்ளு கரண்டி வைத்து மாவை குத்தி விடவும்.

17. பின்னர் தேவையான அளவு பீட்சா சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.

  18. அதன்மீது துருவிய சீஸ் தூவி கொள்ளவும்.

 19. குடைமிளகாய்,  வெங்காயம்,  ஆலிவ்,  ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

20. மீண்டும் தேவையான அளவு  சீஸ் தூவி கொள்ளவும்.

21. அதன் மீது சிறிதளவு மிளகாய் வற்றல் தூவவும்.

22. அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதனுள் ஒரு சிறிய ஸ்டாண்ட் வைத்துக் கொள்ளவும்.

23. மிதமான தீயை விட சற்று கூடுதலான தீயில் மூடி வைத்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

24. 5 நிமிடங்களுக்கு பிறகு பீட்சாவை உள்ளே வைத்து மூடி வைத்து 15 – 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 

25. சுவையான பீட்சா தயார். 

Leave a Reply