ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ரசகுல்லா போன்றே ரசமலாய் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து பின்னர் செய்யப்படுகிறது. இதன் சுவை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். சுவையான ரசமலாய் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான ரசமலாய் செய்ய சில குறிப்புகள்
- பன்னீரை பிரித்து எடுக்கும் பொழுது எலுமிச்சை பழ சாறு பயன்படுத்தலாம் அல்லது அதே அளவிற்கு வினிகர் பயன்படுத்தலாம்.
- பன்னீரை எடுக்கும்பொழுது அதனை வடிகட்டிய பின்னர் மீண்டும் ஒரு முறை தண்ணீரில் வைத்து கழுவினால் எலுமிச்சை பழத்தின் புளிப்பு சுவை முற்றிலுமாக நீங்கும்.
- ரப்டி செய்யும் பொழுது நீங்கள் விருப்பப்பட்ட படி ஓரளவுக்கு கெட்டியாகவோ அல்லது பாஸந்தி போன்று நன்கு கெட்டியாகவோ செய்துகொள்ளலாம்.
- பன்னீரை நன்கு பிசைந்து மாவாக்கி கொள்ளவும் சரியாக பிரியாமல் சிறுசிறு கட்டிகள் உடன் இருந்தால் ரசமலாய் உடைந்து வரும்.
- ரசமலாய் செய்வதற்கு பன்னீரை பிரஷர் குக்கரில் வைத்து மூன்று விசில் வைத்துள்ளேன் அதற்கு பதிலாக நீங்கள் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் மூடி வைத்து 20 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம் .
- ரசமலாய் ரப்டியில் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து பின்னர் பரிமாறவும்.
இதர வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டு, பாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா, பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா, பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.
பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 2 லிட்டர்
- எலுமிச்சை பழம் – 1/2
ரப்டி செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 1.5 லிட்டர்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
- பொடியாக நறுக்கிய பாதாம் – 20 கிராம்
- பொடியாக நறுக்கிய பிஸ்தா – 20 கிராம்
ரசமலாய் செய்வதற்கு தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 1 கப் + 1 மேஜை கரண்டி
- மைதா – 1 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- பொடித்த பாதாம் மற்றும் பிஸ்தா – மேலே தூவி அலங்கரிக்க
செய்முறை
1. பன்னீர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.
2. பால் நன்கு காய்ந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
3.பாதி அளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
4. அதனை காய்ச்சி வைத்துள்ள பால் சேர்த்து கலக்கவும்.
4. பால் திரிந்த உடன் வடிகட்டியில் கொட்டி தண்ணீரை வடிகட்டவும்.
5. 15 முதல் 20 நிமிடங்களுக்கு தொங்கவிட்டு தண்ணீரை முற்றிலுமாக வடிகட்டவும்.
6. ரப்டி செய்ய ஒரு பாத்திரத்தில் 1.5 லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.
7. பால் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். அதனுடன் அரை கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
8. அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.
9. அதனுடன் 20 கிராம் அளவு பொடித்த பாதாம் மற்றும் 20 கிராம் அளவு பொடித்த பிஸ்தா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
10. நன்கு கலந்து பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
11. 20 நிமிடங்களுக்கு பிறகு பன்னீரை நன்கு பிசைந்து கொள்ளவும்.
12. அதனுடன் ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து பன்னீர் மென்மையாக மாறும் வரை பிசையவும்.
13. அதனை சிறிது சிறிதாக உருட்டி தட்டி கொள்ளவும்.
14. பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு சர்க்கரை சேர்க்கவும் அதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும் .
15. பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
16. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள ரசமலாய் களை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
17. பிரஷர் குக்கரை மூடி வைத்து 3 விசில் வைக்கவும்.
18. பிரஷர் ரிலீசானதும் குக்கரை திறக்கவும்.
19. சர்க்கரை தண்ணீரை லேசாக பிழிந்து எடுக்கவும்.
20. தயார் செய்து வைத்துள்ள ரப்டி சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
21. சுவையான ரசமலாய் தயார்.