See this Recipe in English
ரவா இட்லி தென்னிந்தியாவின் புகழ்பெற்றது, கர்நாடகாவில் தோன்றியது. இது ரவா, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தயிர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை கொண்டு பஞ்சுபோன்ற இட்டு செய்யப்படுகிறது. இது ஆவியில் வேக வைக்கப்படும். சட்னி-சாம்பார் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.
பொதுவாக இட்லி அரிசி கொண்டு செய்யப்படுகிறது, அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்க வேண்டும், சுவையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும். ஆனால் இதற்கு 18 மணிநேரம் முதல் 20 மணி நேரம் வரை ஆகும். ரவா இட்லி செய்யும் பொழுது ஊற வைத்து அரைக்க தேவையில்லை என்பதால் 30 நிமிடங்களுக்குள்ளாகவே மாவு தயார் செய்யலாம் அதேசமயம் புளிக்க வைக்கவும் தேவையில்லை.
சுவையான ரவா இட்லி செய்ய சில குறிப்புகள்
- ரவா இட்லி செய்வதற்கு கொரகொரப்பாக ரவா எடுத்துக் கொள்ளவும்.
- ரவா வறுக்கும் பொழுது மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். அதிக தீ வைத்து வறுக்கும் பொழுது கரிந்து விடும் வாய்ப்புள்ளது.
- பச்சைமிளகாய், இஞ்சி, ஆகியவை வறுக்கும் பொழுது கூடவே சிறிதளவு கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதில் நான் ஈனோ ஃபுரூட் சால்ட் சேர்த்துள்ளேன் அதற்கு பதிலாக நீங்கள் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
- கெட்டியான மற்றும் புளிப்பான தயிர் பயன்படுத்திக் கொள்ளவும், தயிரில் புளிப்பு இல்லை என்றால் சிறிதளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்துக்கொள்ளலாம்
- சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை ஆகியவை சேர்த்துக்கொள்ளலாம்.
இதர வகைகள் – பாசிப்பருப்பு இட்லி, சில்லி இட்லி, பொடி இட்லி, ஓட்ஸ் இட்லி, இட்லி மிளகாய் பொடி, இட்லி மாவு போண்டா, தக்காளி குருமா, மசாலா இட்லி.
இதர சட்னிவகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்
See this Recipe in English
ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 2 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/4 தேக்கரண்டி சீரகம்
- 2 தேக்கரண்டி கடலை பருப்பு
- 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு
- 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
- 3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- 1.5 கப் கெட்டித் தயிர்
- 1 தேக்கரண்டி ஈனோ ஃபுரூட் சால்ட்
செய்முறை
1. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும், அதனுடன் 1 கப் ரவை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
2. ஐந்து நிமிடங்களுக்கு வறுக்கவும் அல்லது வாசனை வரும் வரை வறுக்கவும்.
3. பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
4. மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், அதனுடன் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் கால் தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்.
5. கடுகு வெடித்த பின்னர் 2 தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.
6. பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
7. அதனுடன் கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள், 3 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
8. இப்பொழுது அதனை வறுத்த ரவையுடன் தனியே எடுத்து வைக்கவும்
9. தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
10. அதில் ஒன்றரை கரண்டி கெட்டியான தயிர் சேர்த்து கலக்கவும்.
11. நன்கு கலந்த பின்னர் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
12. இப்பொழுது மாவு நன்கு ஊறி கெட்டியாக இருக்கும்.
13. அதில் ஒரு தேக்கரண்டி ஈனோ ஃபுரூட் சால்ட் சேர்த்துக் கொள்ளவும்.
14. சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
15. இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை நிரப்பவும்.
16. 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
17. சுவையான ரவா இட்லி தயார் சட்னி சாம்பாருடன் பரிமாறவும்.