See this Recipe in English
சிவப்பு அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய, சுவையான, அதே சமயத்தில் ஆரோக்கியமான பாயசம். இதனை 10 – 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்துவிடலாம். சிவப்பு அவலில் பாயசம் செய்வதற்கு பதிலாக வெள்ளை அவல் சேர்த்தும் இதே முறையில் பாயசம் செய்யலாம். சிவப்பு அவல் பாயசம் சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன் இதற்கு பதிலாக நீங்கள் வெல்லம் சேர்த்தும் செய்யலாம். சுவையான சிவப்பு அவல் பாயசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான சிவப்பு அவல் பாயசம் செய்ய சில குறிப்புகள்
- கெட்டி அவல், நைஸ் அவல் என கடைகளில் கிடைக்கும், இவற்றில் கெட்டி அவல் பாயசம் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
- சிவப்பு அவல் சேர்ப்பதற்கு பதிலாக வெள்ளை அவல் சேர்த்தும் இதே முறையில் பாயசம் செய்யலாம்.
- சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, பாகு காய்ச்சி, வடிகட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
- தேங்காய் சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது, தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.
- தேங்காயை துருவி சேர்ப்பதற்கு பதிலாக சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
- கெட்டியான தண்ணீர் சேர்க்காத பால் பயன்படுத்திக் கொள்ளவும்.
- விருப்பப்பட்டால் கடைசியாக 4 தேக்கரண்டி கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- நெய் – 2 மேஜை கரண்டி
- சிவப்பு அவல் – ½ கப் – 75g
- காய்ச்சிய பால் – ½ லிட்டர் – 500ml
- சர்க்கரை – ¼ கப் – 50g
- முந்திரி பருப்பு – 10
- காய்ந்த திராட்சை – 10
- துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
- ஏலக்காய் – 4
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 மேஜை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. நெய் சூடானதும் அதில் ½ கப் சிவப்பு அவல் சேர்த்துக் கொள்ளவும்.
3. அவல் லேசாக பொரிந்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
4. அவல் வறுபட்டதும், ½ லிட்டர் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளவும்.
5. அவல் மென்மையாக வேகும் வரை அதனை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும் அதற்கு 5 முதல் 6 நிமிடங்கள் வரை ஆகலாம்.
6. ஒரு பேனில் 1 மேஜை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
7. நெய் சூடானதும் அதில் 10 முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
8. 10 காய்ந்த திராட்சை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
9. அதனுடன் 4 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றைத் தனியே எடுத்து வைக்கவும்.
10. அவல் வெந்த பின்னர் அதில் 1/4 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
11. சர்க்கரை கரைந்ததும் 4 ஏலக்காய்களை தட்டி சேர்த்துக் கொள்ளவும்.
12. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
13. சுவையான சிவப்பு அவல் பாயசம் தயார்.