See this Recipe in English
தர்பூசணி வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய பழம். இதனை சாப்பிடுவதால் வெயில் காலத்தில் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கலாம். தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதனை ஜூஸ் செய்து குடிக்கலாம். தர்பூசணி ஜூஸ் செய்யும் பொழுது அதனுடன் இஞ்சி, மிளகுத்தூள், நாட்டுச் சர்க்கரை, போன்றவற்றை சேர்த்து செய்யும்பொழுது சுவை கூடுதலாக இருக்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. 3 விதமான தர்பூசணி ஜூசை வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் செய்து சுவைக்கலாம்.
சுவையான தர்பூசணி ஜூஸ் செய்ய சில குறிப்புகள்
- தர்பூசணியை வெட்டும் பொழுது வெள்ளை பகுதிகள் இல்லாமல் சிவப்பு நிற பழத்தை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- தர் பூசணி விதைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதற்குப் பின்னர் ஜூஸ் தயாரிக்கவும்.
- ஜூஸ் செய்யும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
- இஞ்சி சேர்க்கும் பொழுது தோலை முற்றிலுமாக நீக்கிவிட்டு அதன்பின்னர் இஞ்சியை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- தர்பூசணி ஜூஸ் தண்ணீர் பதமாக இருப்பதால் ஐஸ்கட்டிகள் சேர்க்கவில்லை, நீங்கள் விருப்பப்பட்டால் ஐஸ்கட்டி சேர்த்து செய்யலாம் அல்லது சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.
- ஜூஸ் செய்யும் பொழுது நாட்டுச்சக்கரை தேன் அல்லது சர்க்கரை இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது எதுவும் சேர்க்காமலும் இயற்கையான இனிப்பு சுவையுடனும் ஜூஸ் செய்யலாம்.
இதர வகைகள் – பழ சர்பத், ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
தர்பூசணி இஞ்சி ஜூஸ்
- தர்பூசணி பழம் – 1 பெரிய துண்டு
- இஞ்சி – 2 துண்டுகள்
- நாட்டுச் சர்க்கரை – 2 தேக்கரண்டி
தர்பூசணி எலுமிச்சை ஜூஸ்
- தர்பூசணி பழம் – 1 பெரிய துண்டு
- எலுமிச்சை பழச்சாறு – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- தேன் – 2 தேக்கரண்டி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஜூஸ்
- தர்பூசணி பழம் – 1 பெரிய துண்டு
- தர்பூசணி பழம் – பொடியாக நறுக்கியது சிறிதளவு
- துளசி விதைகள் – 1 தேக்கரண்டி
- தேன் – 2 தேக்கரண்டி
தர்பூசணி இஞ்சி ஜூஸ்
செய்முறை
1. ஒரு பெரிய துண்டு தர்பூசணி பழத்தை விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 பெரிய துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
3. சுவைக்காக 2 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
4. தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
6. டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி அல்லது புதினா இலையை வைத்து பரிமாறலாம்.
தர்பூசணி எலுமிச்சை ஜூஸ்
1. ஒரு பெரிய துண்டு தர்பூசணியை விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை பழ சாறு சேர்த்துக் கொள்ளவும்.
4. சுவைக்காக 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனை தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
6. பின்னர் ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
7. டம்ளரில் ஊற்றி ஒரு துண்டு எலுமிச்சையை நறுக்கி அதன்மேல் வைக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ்
1. ஒரு தேக்கரண்டி துளசி விதைகளை சிறிதளவு தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2. ஒரு பெரிய துண்டு தர்பூசணியை விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
3. சுவைக்காக 2 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்.
4. தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
5. ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும்.
6. ஒரு டம்ளரில் பொடியாக நறுக்கிய தர்பூசணி பழத்தை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
7. அதனுடன் 3 தேக்கரண்டி ஊற வைத்த துளசி விதைகளை சேர்க்கவும்.
8. தர்பூசணி ஜூஸை அதில் ஊற்றவும்.
9. டம்ளரில் ஊற்றி ஒரு துண்டு தர்பூசணியை அடியில் நறுக்கிவிட்டு டம்ளரில் மேல் வைத்து பரிமாறலாம்.