See this Recipe in English
பீட்சா மிகவும் சுவையான இளைஞர்கள், குழந்தைகள், அனைவருக்கும் பிடித்த உணவு வகை. இது இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இது தவிர உலகம் முழுவதும் பீசா அனைவருக்கும் விருப்பமான உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் சிக்கன் பீசா, சீஸ் பீஸா, போன்றவை மிகவும் பிரபலம். பீட்சா செய்ய மூன்று அடிப்படை விஷயங்கள் தேவை, முதலில் பீசா மாவு (pizza base) செய்ய வேண்டும், பின்னர் பீசா சாஸ் (pizza sauce), கடைசியாக டாப்பிங்ஸ் (toppings) எனப்படும் அதற்கு தேவையான காய்கறிகள் போன்றவற்றை தயாரிக்க வேண்டும், இவற்றை செய்து ஓவன் இருந்தால் அதில் பேக் செய்யலாம் அல்லது இட்லி பாத்திரம் போன்ற அகலமான பாத்திரத்தில் வைத்து 15-20 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம்.
சுவையான பீசா செய்ய சில குறிப்புகள்
- பொதுவாக பீட்சா மாவு மைதாவில் செய்யப்படுகிறது நீங்கள் மைதா மாவு பயன்படுத்தலாம் அல்லது கோதுமை மாவு பயன்படுத்தலாம் அல்லது இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தலாம்.
- வீட்டிலேயே pizza sauce தயாரிக்கலாம் அல்லது கடையில் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கடையில் கிடைக்கும் டொமேட்டோ சாஸ், உப்பு, சர்க்கரை, பூண்டு ஆகியவற்றை கலந்தும் செய்யலாம்.
- அதேபோல டாப்பிங் செய்வதற்கு நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட காய்கறிகள், சிக்கன், பன்னீர், அல்லது கீரை எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, பீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.
இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர், முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர், வெஜிடபிள் பர்கர் .
See this Recipe in English
தேவையான பொருட்கள்
பீசா மாவு செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா
- 3/4 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 1 தேக்கரண்டி ஈஸ்ட்
- 1/2 கப் வெந்நீர்
பீசா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
- 3 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 2 தேக்கரண்டி ஓரிகனோ
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 2 தேக்கரண்டி தக்காளி சாஸ்
டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள்
- 2 ஸ்லைஸ் மொஸரெல்லா சீஸ்
- 2 ஸ்லைஸ் செடார் சீஸ்
- பெரிய வெங்காயம் நறுக்கியது சிறிதளவு
- குடைமிளகாய் நறுக்கியது சிறிதளவு
- நறுக்கிய காளான் சிறிதளவு
- கருப்பு ஆலிவ் சில துண்டுகள்
- 1/4 தேக்கரண்டி உப்பு
- 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
பீசா மாவு செய்யும் முறை
1. அகலமான பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி ஈஸ்ட், முக்கால் தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
2. அதனுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு பிசையவும்.
3. பின்னர் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்த மாவை வைத்து மூடி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பீசா சாஸ் செய்யும் முறை
1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 3 தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், 5 பல் பூண்டு, ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவும்.
2. மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
3. தக்காளியின் தோலை உரித்து விட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
5. பின்னர் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி ஓரிகனோ, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், இரண்டு தேக்கரண்டி டொமேட்டோ சாஸ், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
6. 10 முதல் 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும். இப்பொழுது சுவையான பீசா சாஸ் தயார்.
பீசா டாப்பிங் செய்முறை
1. ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஒரு பெரிய வெங்காயம், குடைமிளகாய், மற்றும் காளான், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நிமிடத்திற்கு வதக்கி கொள்ளவும்.
2. கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கி அடுப்பை அணைத்து விடவும் இப்பொழுது பீசா டாப்பிங்ஸ் தயார்.
பீசா செய்முறை
1. உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை 425F/215C பிரீ ஹிட் செய்துக்கொள்ளவும், அல்லது அகலமான பாத்திரத்தில் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதிகமான தீயில் 10 நிமிடங்கள் சூடாக்கவும்.
2. இப்பொழுது பீசா மாவு நன்கு உப்பி வந்திருக்கும், அதனை மீண்டும் ஒருமுறை பிசைந்துகொள்ளவும், பின்னர் இரண்டாக பிரித்துக் கொள்ளவும்.
3. ஒரு பகுதியை கையால் 9 inch அகலத்திற்கு தட்டி கொள்ளவும்.
4. ஒரு தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும் அதில் தயாராக வைத்துள்ள மாவை வைத்து ஒரு சிறு போர்க் கொண்டு சிறு சிறு துளைகள் இட்டு கொள்ளவும்.
5. இப்பொழுது தயாராக உள்ள பீசா சாஸ் தேவையான அளவு தடவிக் கொள்ளவும்.
6. பின்னர் இரண்டு மொஸரெல்லா சீஸ் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
7. பின்னர் தயாராக உள்ள டாப்பிங்ஸ் அதன் மேல் தூவி கொள்ளவும்.
8. இப்பொழுது 2 செடார் சீஸ் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
9. நீங்கள் விருப்பப்பட்ட அளவு ஒலிவ் சேர்த்துக் கொள்ளவும்.
10. நீங்கள் ஓவனில் வைப்பதாக இருந்தால் 10-12 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும், பாத்திரத்தில் வைக்கும் போது 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
11. சுவையான பீசா தயார்.