See this Recipe in English
பாதாம் அல்வா பாதாம், சர்க்கரை, குங்குமப்பூ, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது செய்வது மிகவும் சுலபம் 25 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். பாதம் கொண்டு பல விதமான இனிப்பு வகைகள் செய்யலாம். பாதாம் பால், பாதாம் பர்பி, மற்றும் பாதாம் அல்வா போன்றவை. இவற்றில் பாதாம் அல்வா உடனடியாக செய்யக்கூடிய ஒரு சுவையான அல்வா. குறிப்பாக இது தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் செய்வது மிகவும் பிரபலம்.
இந்தியாவில் பல விதமான அல்வா செய்யப்படுகிறது. பாதாம் அல்வா, முந்திரி அல்வா, கேரட் அல்வா, வட இந்தியாவில் மிகவும் பிரபலம். தமிழகத்தில் அனைவரும் அறிந்தது திருநெல்வேலி அல்வா. இதுதவிர பாதாம் அல்வா திருமணம் போன்ற விசேஷங்களில் செய்யப்படும். பாதாம் அல்வா பரிமாறும் பொழுது சிறு சிறு பொட்டலமாக கட்டி வைக்கலாம். இவற்றை நாம் திருமணங்களில் பார்த்திருப்போம் parchment பேப்பர் எனப்படும் தாளில் 3-4 தேக்கரண்டி பாதாம் அல்வா வைத்து அது வெளியே வராமல் பொட்டலம் செய்யவும்.
சுவையான பாதாம் அல்வா செய்ய சில குறிப்புகள்
- பாதாம் அல்வா செய்யும் பொழுது பாதாமை அரைத்து சேர்க்கவும், அது மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- பாதாமை அரைக்கும் பொழுது ஓரளவுக்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், நைசாக அரைக்கும் பொழுது அல்வாவின் பதம் சரியாக வராது.
- இனிப்புக்கு தகுந்தால் போல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
- குங்குமப்பூ சேர்த்த பாலுக்கு பதிலாக 1/4 தேக்கரண்டி ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளலாம்.
- பாதாம் அல்வா ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.
இதர அல்வா வகைகள் – கேரட் அல்வா, காசி அல்வா, கோதுமை அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா.
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்
- 1 கப் பாதாம் (150 grams)
- 1 கப் சர்க்கரை (200 grams)
- 1 கப் பால் (250 ml)
- 2 தேக்கரண்டி நெய்
- 1 சிட்டிகை குங்குமப்பூ
- 1/4 கப் பால்
பாதாம் அல்வா செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
2. அதனுடன் 1 கப் பாதாம் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
3. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவிடவும்.
4. பின்னர் மீண்டும் பச்சை தண்ணீர் ஊற்றி கழுவவும்.
5. இப்பொழுது லேசாக அழுத்தினால் பாதாம் தோலை விட்டு வெளியே வரும், இதேபோல எல்லாவற்றையும் தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.
6. தணணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது 1 கப் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும், மிகவும் நைசாக அல்லது கொரகொரப்பாக இல்லாமல் மிதமாக அரைத்துக் கொள்ளவும்.
8. இப்பொழுது ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
9. அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
10. பின்னர் 1 கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
11. ஒரு சிட்டிகை குங்குமப்பூவை 1/4 கப் பாலில் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளவும்.
12. 10 நிமிடங்களுக்கு மெதுவாக கிளறவும்.
13. இப்பொழுது 1 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
14. மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும்.
15. அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
16. சுவையான பாதாம் அல்வா தயார்.