See this Recipe in English
சுழியம் தமிழ் நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது கடலைப்பருப்பு, தேங்காய், வெல்லம், மைதா மாவு, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. தீபாவளியன்று காலை உணவுடன் சுழியம் பரிமாறப்படும். கடலைப்பருப்பு பூரணத்தை மைதா மாவில் முக்கி எண்ணெயில் பொறித்து செய்யலாம் அல்லது பூரணத்தை இட்லி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் பொறித்து செய்யலாம், இரண்டு முறைகளுமே தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் செய்யப்படுகிறது. சுவையான பாரம்பரியமிக்க சுழியம் நீங்களும் செய்து சுவைத்து.
சுவையான சுழியம் செய்ய சில குறிப்புகள்
- கடலைப்பருப்பை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைத்து செய்யலாம், அப்போதுதான் கடலைப்பருப்பு சீக்கிரமாகவும் அதே சமயத்தில் மென்மையாகவும் வேகம்.
- ஊற வைக்காமல் வேகவைத்தால் 6 முதல் 7 விசில் வைத்து மென்மையாக வேக வைக்கவும்.
- 1 பங்கு கடலைப் பருப்புக்கு 1 பங்கு வெல்லம் சேர்த்து உள்ளேன், உங்கள் சுவைக்கேற்ப வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
- விருப்பப்பட்டால் தேங்காயை சிறிதளவு நெய்யில் வறுத்து பின்னர் வெல்லத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
- மைதா மாவுக்கு பதிலாக இட்லி மாவில் தோய்த்து சுழியம் செய்யலாம்.
- சுழியம் பொரிக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா, தட்டை முறுக்கு, முறுக்கு.
இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டு, பாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா, பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா, பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.
தேவையான பொருட்கள்
பூரணம்
- கடலைப்பருப்பு – 1 கப் – 200g
- வெல்லம் – 1 கப்
- துருவிய தேங்காய் – ½ கப்
- சுக்கு பொடி – ½ தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
- நெய் – 2 மேஜைக்கரண்டி
மேல் மாவு
- மைதா – 1 கப் – 140g
- உப்பு – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை ½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
3. ஊறிய பின்னர் பிரஷர் குக்கரில் 4 விசில் வைத்து வேக வைக்கவும் அல்லது பருப்பு மசியும் வரை வேக வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
5. கட்டிகளில்லாமல் வெல்லம் கரைந்த பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
6. பின்னர் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். ½ தேக்கரண்டி சுக்கு, ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி, சேர்த்துக் கொள்ளவும்.
7. 1 மேஜை கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனுடன் ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்.
9. வெல்ல பாகு தேங்காயுடன் சேர்ந்து ஓரளவு கெட்டியானதும், வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்துக் கொள்ளவும்.
10. வெல்லமும் கடலை பருப்பும் சேர்ந்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
11. கடைசியாக 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
12. பின்னர் அதனை ஆற வைக்கவும்.
13. ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
14. மேல்மாவு செய்வதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
15. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும், அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
16. பின்னர் பூரணத்தை மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரிக்கவும்.
17. மிதமான தீயில் வைத்து ஓரளவு பொன்னிறமாகும் வரை வறுக்கவும் அல்லது 2 – 3 நிமிடங்களுக்கு பொரித்து எடுக்கவும்.
18. சுவையான பாரம்பரியமிக்க சுழியம் தயார்.